
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டு தோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் 45 ஆவது புத்தக கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புத்தக கண்காட்சியை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்கிக் கிடப்பதாக பபாசி துணைத் தலைவர் மயில்வேலன், முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த 45 ஆவது புத்தக கண்காட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் இணையதளத்தில் சென்று ரூ.10 ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். இந்நிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள 45 ஆவது புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.