உலகின் மிக உயரமான உறைந்த ஏரியான பாங்காங் ஏரியில் மராத்தான் போட்டி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பாங்காங் ஏரியானது குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்கிறது. இதனால் உப்பு நீர் ஏரி பனியால் உறைகிறது. இந்த உறைந்த உலகில் மிக உயரமான உறைந்த ஏரியான பாங்காங் ஏரியில் மாரத்தான் நடைபெற்றது.
கடந்த ஆண்டு முதல் முறையாக உறைந்த ஏரியில் அரை மராத்தான் போட்டி நடைபெற்றது. அதோடு, உலகின் உயரமான இடத்தில் நடந்த மராத்தான் என்ற கின்னஸ் சாதனையை லடாக் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2ஆவது முறையாக லடாக்கிலுள்ள பாங்காங் ஏரியில் மராத்தான் நடைபெற்றுள்ளது.
லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் அரசு மற்றும் 14 கார்ப்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்மி ஆகியவற்றுடன் இணைந்து உலகின் மிக உயரமான உறைந்த ஏரியில் மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாரத்தானில் 7 நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை செயலாளர் ரவீந்தர் குமார் கலந்து கொண்டார். பனிப்பாறைகள் உருகுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மராத்தான் நடத்தப்பட்டுள்ளது. இதில், மான், மெராக், ஸ்பாங் மிக், ஃபோப்ராங் போன்ற பாங்காங் ஏரி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு 5 கிமீ தூரத்திற்கு சூடான நீர் புள்ளிகள் அமைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.