தமிழ் தலைவாஸ் விளையாடிய 22 போட்டிகளில் 9ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் ஆகிய அணிகள் முறையே 92 மற்றும் 91 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதே போன்று மற்ற 4 அணிகளான தாபங்க் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியானது முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் 8, 9 இடங்களில் இடம் பிடித்திருந்தது. முதல் 12 போட்டிகளில் விளையாடி 10ல் தோலியும், 2ல் வெற்றியும் அடைந்தது. இதன் காரணமாகவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. மேலும், 2ஆவது பாதியில் அதிக வெற்றிகளை பெற்றது. இருந்த போதிலும் மற்ற அணிகள் சிறப்பாக விளையாடி அதிக வெற்றிகளை குவித்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தமிழ் தலைவாஸ் அணியானது விளையாடிய 22 போட்டிகளில் 9 வெற்றி மற்றும் 13 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 51 புள்ளிகள் பெற்று 8ஆவது இடம் பிடித்தது. இன்னும் 3 போட்டிகளுக்கு பிறகு எலிமினேட்டர் சுற்று போட்டிகள் நடை பெற இருக்கிறது. இந்த 3 போட்டிகளில் வெற்றி, தோல்வியை பொறுத்து மற்ற அணிகளின் வரிசையில் மாற்றம் ஏற்படலாமே தவிர வேறு ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.