400 மீ மற்றும் 110 மீ தடகளப் போட்டியில் தமிழக வீரர்களான சரண் மற்றும் விஷ்ணு இருவரும் தங்கப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாடு முழுவதிலுமிருந்து 5,600க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்), வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் என்று 26 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
முதல் முறையாக ஸ்குவாஷ் இந்த கேலோ விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமான சிலம்பம் செயல் விளக்க விளையாட்டாக இந்த கேலோவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இன்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த 400 மீட்டர் தடகளப் போட்டியில் சரணும், 110 மீட்டர் தடை தாண்டும் தடகளப் போட்டியில் விஷ்ணுவும் தங்கப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.
இதே போன்று சைக்கிளிங் டிராக் பிரிவில் 2 தங்கம் வென்றுள்ளது. இன்று ஒரே நாளில் சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாடு 2 தங்கம் வென்றுள்ளது. 4 நாட்கள் முடிவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு, 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று மொத்தமாக 31 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று மொத்தமாக 45 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஹரியானா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என்று 32 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும், டெல்லி 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தமாக 19 பதக்கங்கள் கைப்பற்றி 4ஆவது இடத்திலும், பஞ்சாப் 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என்று மொத்தமாக 18 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.