பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது.
இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். அதிரடியாக இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 304 ரன்களை குவித்தது.
சதமடித்த இமாம் உல் ஹக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜமானுடன் ஆசிஃப் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதே ரன்ரேட் குறைந்துவிடாமல் ஆடியது. அதிரடியாக ஆடிய ஜமான், இரட்டை சதம் விளாசினார். 210 ரன்கள் குவித்து கடைசி வரை ஜமான் ஆட்டமிழக்கவில்லை. 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது.
இரட்டை சதம் விளாசிய ஜமான், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் ஜமான் பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், கிறிஸ் கெய்ல் ஆகிய ஐந்து வீரர்களுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய ஆறாவது வீரர் ஃபகார் ஜமான். இவர்களில் ரோஹித் சர்மா, மூன்று முறை இரட்டை சதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபகார் இரட்டை சதமடிப்பதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர் அடித்த 194 ரன்கள் என்பதே பாகிஸ்தான் வீரரால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.