mi vs dc: டெல்லியின் வெற்றிக்கு காரணமாக 'பும்ரா, சாம்ஸ்': வெற்றியை கோட்டைவிட்ட மும்பை: லலித், அக்ஸர் காட்டடி

Published : Mar 27, 2022, 08:05 PM ISTUpdated : Mar 27, 2022, 08:19 PM IST
mi vs dc: டெல்லியின் வெற்றிக்கு காரணமாக 'பும்ரா, சாம்ஸ்': வெற்றியை கோட்டைவிட்ட மும்பை: லலித், அக்ஸர் காட்டடி

சுருக்கம்

mi vs dc: அக்ஸர் படேலின் காட்டடி ஆட்டம், லலித் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் மும்பையில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

அக்ஸர் படேலின் காட்டடி ஆட்டம், லலித் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் மும்பையில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

டெல்லி அணியின் பந்துவீச்சுதான் சொத்தையாக இருந்தது என்றால் அதைவிட மோசமாக இருந்தது மும்பை அணியின் பந்துவீச்சு. அதிலும் பும்ரா, சாம்ஸ் தர்மபிரபுகளாக விளங்கினார். டெல்லியின் அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கியவர்கள் பும்ரா, சாம்ஸ் என்றால் மிகையில்லை. இருவரும் சேர்ந்து 7.2 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கினர். 

ஒரு கட்டத்தில் ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. அக்ஸர் படேல், லலித் யாதவ் கூட்டணியைப் பிரித்திருந்தால் ஆட்டம் மும்பை வசம் இருந்திருக்கும் ஆனால், இருவரையும் பிரிக்கமுடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் மகாமட்டமாகப் பந்துவீசினார்கள். இப்படியெல்லாம், இதுபோன்ற பிட்சில் பும்ரா பந்துவீசினால் சர்வதேச அரங்கில் பும்ரா மீதிருக்கும் பயமே போய்விடும் என்பதை பும்ரா புரிந்துகொள்ள வேண்டும். 
அதிலும் சாம்ஸ் வீசிய 18-வது ஓவர்தான் ஆட்டம்தான் திருப்புமுனையாகும். இந்த ஓவரில் 3 சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை லலித், அக்ஸர் இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஒட்டுமொத்தத்தில் வெற்றியை கைநழுவவிட்டு ரோஹித் சர்மா அணி மிரண்டுபோய் இருக்கிறது. 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த், ஷீபெர்ட் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 30 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த மன்தீப் சிங்(0) ரன் ஏதும் சேர்க்காமல் முருகன் அஸ்வின் பந்துவீச்சிலும், ரிஷப்பந்த்(1) மில்ஸ் பந்துவீச்சிலும்  ஆட்டமிழக்க டெல்லி அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா,லலித் யாதவ் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடிஸ்கோரை உயர்த்தினர். பவர்ப்ளேயில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. பிரித்விஷா 38 ரன்கள்(2சிக்ஸர்,4பவுண்டரி) சேர்த்தநிலையில் பாசில் தம்பி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த ரோமன் பாவல்(0) ரன்ஏதும் சேர்க்காமல் பாசில் தம்பி பந்துவீச்சில் வெளியேறினர். ஷர்துல் தாக்கூர் களமிறங்கி அதிரடியாக ஆடி 4 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் சேர்த்து பாசில் தம்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தா்.

7-வது விக்கெட்டுக்கு லலித் யாதவ், அக்ஸர் படேல் கூட்டணிசேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அக்ஸர் படேல் 17 பந்துகளில் 38 ரன்களுடனும்(3சிக்ஸர், 2பவுண்டரி), லலித் யாதவ் 38பந்துகளில் 48 ரன்களுடனும்(4பவுண்டரி,2சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசி 6 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா வீசிய 15-வது ஓவரில்அக்ஸர் படேல் பவுண்டரி,சிக்ஸர் என 15 ரன்கள்விளாசினார். சாம்ஸ் வீசிய 18வது ஓவர்தான் டெல்லி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. லலித், அக்ஸர் இருவரும் நொறுக்கிஎடுத்து சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினர் .

சாம்ஸ் வீசிய 18-வது ஓவரில் அக்ஸர் படேல் 2 சிக்ஸர், லலித் ஒரு சிக்ஸர்,பவுண்டரி என விளாசி 24 ரன்கள் சேர்த்தனர். கடைசி 2 ஓவர்களில் 4 ரன்கள் தேவைஎன்றநிலையில்  பும்ரா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து லலித் வெற்றியை உறுதி செய்தார்.மும்பை அணியின் பும்ரா, சாம்ஸ் இருவரும் 7.2 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கி தர்மபிரபுகளாக மாறினர். பாசில் தம்பி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ருத்தரதாண்டவம் ஆடிவிட்டார். இஷான் கிஷன்48 பந்துகளில் 81 ரன்கள்(2சிக்ஸர்,11பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் சர்மா 32 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கிஷன் இருவரும் 67 ரன்கள்சேர்த்துப் பிரிந்தனர். பவர்ப்ளேயில் மும்பைஅணி, விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது. 

ரோஹித் சர்மா அதிரடி வேடிக்கை முடிந்தபின், இஷான் கிஷன் தனதுவேட்டையைத் தொடங்கினார். 34 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், அடுத்த 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தி்ருந்தது. இஷன் கிஷன் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது. 

மும்பை அணியில் மற்ற வகையில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. கெய்ரன் பொலார்ட் 3 ரன்னில் ஏமாற்றினார். டிம் டேவிட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 22 ரன்கள் சேர்த்துபெவிலியன் திரும்பினார். 

டெல்லி அணியின் பந்துவீச்சு சொத்தையாக இருந்தது. ஏலத்தில் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்த குல்தீப் யாதவை டெல்லி அணி எடுத்தது சரியான தேர்வு என்பதை நிரூபித்துவிட்டார். 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அதிலும் ரோஹித்சர்மா, பொலார்ட், அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய 3 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தி தனது தேர்வை சரியென நிருபித்து ஃபார்முக்குத்திரும்பியுள்ளார்.

அடுத்ததாக, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவர் மட்டுமே டெல்லி அணியில் ஓரளவுக்கு உருப்படியாகப் பந்துவீசினர். கலீல் அகமது 13 டாட் பந்துகளையும், குல்தீப் 8 டாட் பந்துகளையும் வீசினர். 
நாகர்கோட்டி,அக்ஸர் படேல், தாக்கூர் ஓவரை இஷான் கிஷனும்,ரோஹித் சர்மாவும் வெளுத்து வாங்கிவிட்டனர். மொத்தத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சு பல்இல்லாத பாட்டிபோன்று அமைந்திருந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!