வெல்லத்துக்குப் பதிலாக சர்க்கரை தந்தால் விவசாயிகளுக்கு இழப்பு... எப்படி தெரியுமா? தீபா அட்ராசக்க அறிக்கை...

Jan 10, 2018, 6:01 PM IST



வெல்லத்துக்குப் பதிலாக பொங்கல் பரிசோடு இந்த ஆண்டு சர்க்கரை வழங்க அரசு முடிவெடுத்ததால், உற்பத்தி செய்த வெல்லம் தேங்கி பெருமளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொது செயலாளர் j.தீபா கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஜெ.தீபா தனது பதிவில் கூறுகையில்; தமிழக அரசு பொங்கல் சிறப்புப் பரிசில் வெல்லத்துக்குப் பதிலாக சர்க்கரையை சேர்த்துள்ளதால் உற்பத்தி செய்த வெல்லம் தேங்கி, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, பட்டுக்குடி, மாகாளிபுரம், தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களில் 3 தலைமுறைகளாக ஏராளமான விவசாயிகள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் பயிரிடும் கரும்புகளை ஆலைகளுக்கு அனுப்பாமல், அவற்றிலிருந்து சாறெடுத்து காய்ச்சி, தாங்களே வெல்லம் தயாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு பொங்கல் பரிசோடு வழங்குவதற்கு வெல்லத்தை இப்பகுதியில் இருந்தே அதிக அளவில் மொத்தமாக கொள்முதல் செய்துவந்தது. இந்த ஆண்டும் அரசு வெல்லம் கொள்முதல் செய்யும் என நம்பி அதிக அளவிலான வெல்லத்தை விவசாயிகள் உற்பத்தி செய்தனர். ஆனால் வெல்லத்துக்குப் பதிலாக பொங்கல் பரிசோடு இந்த ஆண்டு சர்க்கரை வழங்க அரசு முடிவெடுத்ததால், உற்பத்தி செய்த வெல்லம் தேங்கி பெருமளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு மூட்டை வெல்லம் ஆயிரத்து 400 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் உற்பத்தி செலவாவது மிஞ்சும் என்று கூறும் விவசாயிகள், இந்தமுறை அதிக அளவில் வெல்லம் தேக்கமடைந்ததால், ஆயிரத்து 100 ரூபாய்க்குள்தான் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு அல்லது வெல்லத்தை மொத்த கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்... என இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் ஜெ. தீபா கூறியுள்ளார்.