திமுக ஆட்சியில் மக்களுக்கும், போலீசாருக்கு மட்டுமல்ல, சிலைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
திமுக அரசு அல்வா கொடுத்து விட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலைக்கும், தியாகிகளின் படங்களுக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார். அதன்பின், செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,’’தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை உடைத்தது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கும், போலீசாருக்கு மட்டுமல்ல, சிலைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். வெற்றி வாய்ப்பை பொறுத்த அளவில் மக்கள்தான் எஜமானர்கள். மக்கள்தான் நீதிமான்கள்.
இந்த அரசாங்கம் வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது என்பதை இன்றைய பத்திரிகைகளில் பார்த்தேன்.
அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்திருக்கிறது. இந்த அரசாங்கம் அல்வா கொடுத்திருக்கு. இதன் பிரதிபலிப்பு நகர்ப்புற தேர்தலில் நிச்சயம் நடக்கும். பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைப்பதாக அரசு கூறுகிறது.
இதனால் மக்களுக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக ஊர்தி மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் அனுபவம் இல்லாத அதிகாரிகளின் நடைமுறையே காரணம்" என தெரிவித்தார். முன்னதாக மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட குடியரசு தின ஊர்தி தமிழகத்தில் இடம்பெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.