தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்றுள்ளது
தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை வரவேற்றுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத், தன் பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தையை தத்தெடுக்கும் உரிமையை வழங்கக்கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பும் நல்ல நடவடிக்கை என கூறியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய 21 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியது.
இந்த வழக்கில் பெண் நீதிபதி ஹீமா கோலி எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை. மீதமுள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், 3 நீதிபதிகள் தன்பாலின திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். அதன்படி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை. இருப்பினும், அவர்களுக்கான உரிமைகளையும், சுதந்திரத்தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: வெறும் 15 நொடிகளில் இஸ்ரேலை தாக்கும் ஹமாஸ் ஏவுகணை!
இந்த நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்றுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ்.இன் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
“இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம், திருமண வடிவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இடையேயான உறவை பதிவு செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இது அவர்களின் அடிப்படை உரிமையும் அல்ல.” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார் தெரிவிவித்துள்ளார். அவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்கும் உரிமையை வழங்காததும் ஒரு நல்ல நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.