2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மரண அடி விழும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 1993-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 இளைஞரணி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 21-ம் தேதி பேரணி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி பாஜகாவை கடுமையாக விமர்சித்து பேசினார். நாட்டின் பல்வேறு இடங்களில் சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் அநியாயமாக கொலை செய்யப்படுவதாகவும், பா.ஜ.க மக்களிடையே தீவிரவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அக்கட்சி 100-க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறும்.
மேலும் இதற்கான வழியை மேற்கு வங்கம் காட்டும். பண்டல் கட்ட தெரியாதவர்கள், நாட்டை கட்டமைக்க போவதாக என விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். இந்த பேரணியின் போது, பாஜகவின் முன்னாள் எம்.பி. சந்த மித்ரா, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி மொய்னுல் உள்ளிட்ட பலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.