குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு கடந்த 11ஆம் தேதி தினம் மாலை அறிவிப்பானை வெளியிட்டது. சிஏஏ சட்டத்திற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர். இச்சட்டத்தை திரும்ப்பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சக்தி அம்மன் வேடமிட்ட சிறுமிகள் பிரதமர் மோடிக்கு சேலத்தில் வரவேற்பு!
இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.