பள்ளிச் சிறுவர்கள் காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கவில்லை என்று கர்நடாக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பள்ளிகளில் மாநில கல்வித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில் மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது தெரியவந்தது.
மாணவர்களிடமிருந்து அந்தப் பொருள்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டது. இச்சூழலில், கர்நாடக மருந்துக் கட்டுப்பாட்டு துறை 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலிநிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இச்செய்தியின் எதிரொலியாக கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என விமர்சனங்கள் எழுந்தன. கருத்தனை சாதனங்களுக்குத் தடை விதிப்பதால் சிறுவர்கள் மேலும் தவறான பாதையை நோக்கிப் போகக்கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும் எதிர்பாராத கருத்தரிப்புக்கும் வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளது. “கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால், மருந்து விற்பனையாளர்கள் கருத்தடை சாதனங்களைக் கேட்கும் சிறாருக்கு அறிவுரை புகட்ட வேண்டும். எனவே சிறார் ஆணுறை வாங்க தடை ஏதும் இல்லை” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.