New Delhi : ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது இப்பொது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. இதேபோல நொய்டாவில் மளிகை சாமான்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பெண்ணிற்கு டெலிவரி மேன் ரூபத்தில் ஒரு ஆபத்து வந்துள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒரு பெண், தனது மொபைலில் உள்ள ஒரு செயலியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுமித் சிங் என்ற நபர் அந்த மளிகை பொருட்களை டெலிவரி செய்ய அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மளிகை சாமான்களை அந்த பெண்ணிடம் கொடுத்தபோது தான் அந்த வீட்டில், அப்பெண் தனியாக இருப்பதை உணர்ந்துள்ளார். உடனே வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த டெலிவரி செய்யும் நபர். பிறகு அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார் அவர்.
இந்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த நிலையில், அதே நாளில் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனே போலீசில் புகார் செய்துள்ளார். பின்னர் தனி படை அமைத்து அந்த நபரை போலீசார் தேடிய நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அந்த குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரைக் கைது செய்ய ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றபோது, சுமித் கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
உடனே அப்பகுதியில் தேடுதல் மற்றும் சுமித்தை பிடிக்க SWAT குழுக்கள் வரவழைக்கப்பட்டன. போலீஸ் குழுக்கள் அவரை நெருங்கியதும் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் போலீசார் திருப்பிச் சுட்டதில் அவர் காலில் குண்டு பாய்ந்துள்ளது.
சுருண்டு விழுந்த சுமித் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏற்கனவே சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D