India@75 Freedom Fighters: திருப்பூர் குமரன் - கொடிக் காத்த இளைஞன்!

By Raghupati R  |  First Published Mar 28, 2022, 1:45 PM IST

தாய் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் வயது வித்தியாசமின்றி நம் மக்கள் போராடினார்கள். தாய் நாட்டின் கொடியைக் காக்க 28 வயதில் தன் வாழ்க்கையையே உயிர்த் தியாகம் செய்தார் திருப்பூர் குமரன். 1904-ஆம் ஆண்டில் பிறந்து 1932-ல் மறைந்த அந்த மாவீரனின் வரலாறு இதோ..


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் வாழ்ந்த நெசவாளரான நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதிக்கு 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று மகனாகப் பிறந்தார் குமரன். அவருடைய இயற்பெயர் குமாரசாமி. நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் தவித்தது அவருடைய குடும்பம். பதின் பருவ வயதில் குமரன் இருந்தபோது தன் தந்தைக்கு உதவியாக, துணிகளை தலையில் வைத்துக் கொண்டு திருப்பூர் வரை சென்று விற்று வந்தார். 

Latest Videos

சொந்தமாக நெசவுத் தொழில் செய்தும் வருமானம் இல்லாததால், கணக்கெழுதும் வேலையைத் தேடி திருப்பூருக்கே குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார் 18 வயதான குமரன். 20 வயதில் ராமாயி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் சுதந்திரப் போராடத்தில் திருப்பூர் குமரன் ஈடுபடத் தொடங்கினார். பொதுமக்களைக் கூட்டி தேச பக்திப் பாடல்களை பாடுவது, அந்தப் பாடல்களை வைத்து நாடகங்கள் நடத்துவது என இருந்தார் திருப்பூர் குமரன். 

இதற்காகவே ‘திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்ற’த்தையும் அவர் தொடங்கினர். இதனால் பிரிட்டிஷார் காவல் துறையின் பார்வை திருப்பூர் குமரன் பக்கம் திரும்பியது. அவ்வப்போது திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் காவல் துறையினரின் தாக்குதலுக்கு இலக்கானார். 1932-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுதந்திர வேட்கை கொளுந்துவிட்டு எரிந்தது. அப்போதுதான் மகாத்மா காந்தி 'ஒத்துழையாமை' என்ற இயக்கத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தொடங்கி, அதன் வேர்களிலேயே கை வைக்கத் தொடங்கினார். 

இந்தப் போராட்டத்துக்கு மக்களும் பெருவாரி ஆதரவு அளித்தனர்.  இதன் ஒரு பகுதியாக 1932  ஜனவரி 10 அன்று அறப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்தப் போராட்டத்தை ஒடுக்க நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை கைது செய்துகொண்டிருந்தனர். திருப்பூரில் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பி.டி.ஆஷர், அவருடைய மனைவி பத்மாவதி ஆகியோரும் கைதாயினர்.

ஆனால், என்ன நடந்தாலும், எத்தனை கைது நடந்தாலும் இந்தப் போராட்டத்தை நடத்திக்காட்டுவது என திருப்பூரில் முடிவானது. போராட்டத்துக்கு பி.எஸ்.சுந்தரம் என்பவர் தலைமை தாங்க,  திருப்பூர் குமரன் உள்பட ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இளைஞர்கள் தாய் நாட்டின் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலத்தைத் தொடங்கினர். பிரிட்டிஷ் போலீஸார் கொலை வெறியோடு ஊர்வலத்தை அணுகினர். 

கொடி பிடித்து வந்தவர்களையெல்லாம் கீழே தள்ளி பூட்ஸ் காலால் போட்டு மிதித்தனர்.  அணி அணியாகப் புறப்பட்டுவந்த ஒவ்வொருவரையும்  தாக்கி, கை, கால்களை பிரிட்டிஸ் போலீஸார் முறித்தனர். இதில் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பி.எஸ். சுந்தரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மூர்ச்சையானார். அப்படியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை அஞ்சாமல் தேசிய கொடியை ஏந்தியபடி ‘வந்தே மாதரம்’ என்று குரல் எழுப்பியபடி ராமன் நாயரும் திருப்பூர் குமரனும் வந்தனர். 

அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் போலீஸார், இருவரின் கையில் இருந்தும் தேசிய கொடியைப் பறிக்க முயன்றது. கொடியை பிரிட்டிஷ் காவல் துறையினரிடம் கொடுக்காமல், அதை இறுகப் பற்றியவர்களின் தலையில்  ஓங்கி ஓங்கி லத்தியால் அடித்து துன்புறுத்தினர் போலீஸார். ரத்தம் சொட்ட சொட்ட இருவரும்  கீழே சரிந்தனர். இதில் கீழே சரிந்து விழுந்தாலும், தேசியக் கொடியை இறுகப் பற்றியப்படி ரத்தச் சகதியில் கீழே விழுந்து கிடந்தார் குமரன். 

இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அடுத்த நாள் ராமன் நாயர் கண் விழித்தார். குமரன் மட்டும் கண்  விழிக்கவே இல்லை. திருப்பூர் குமரன் உயிரிழக்கும்போது வெறும் 28 வயது. திருமணமாகி இல்லற வாழ்க்கையில் 8 ஆண்டுகள்தான் வாழ்ந்திருந்தார். நாட்டின் விடுதலைக்காகவும் தேசத்தின் கொடிக்காகவும் உயிர்த் துறந்த திருப்பூர் குமரன் போன்றவர்களின் உயிர்த்தியாகத்தால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்.

click me!