தாய்நாட்டிற்கு சுதந்திரத்தை வென்றெடுக்க ஒரு சிப்பாயாக ஆங்கிலேயர்களுடன் போரிட காடுகளிலும், மலைகளிலும், சிறைகளிலும் சாகச மற்றும் கடினமான வாழ்க்கையைத் தேர்ந்தெடத்தவர் தான் கேப்டன் லட்சுமி. இவரின் அசாதாரனமான கதையை சொல்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரளாவில் நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். மெட்ராஸில் ஒரு செழிப்பான பாரிஸ்டரின் மகளாக இளமைப் பருவம் ஆடம்பரமாகக் கழிந்தது. படிப்பில் சிறந்து மருத்துவப் பட்டம் பெற்றவர். கண்கவர் தோற்றம். ஆயினும்கூட, அவர் தனது தாய்நாட்டிற்கு சுதந்திரத்தை வென்றெடுக்க ஒரு சிப்பாயாக ஆங்கிலேயர்களுடன் போரிட காடுகளிலும், மலைகளிலும், சிறைகளிலும் சாகச மற்றும் கடினமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். அவர் தான் கேப்டன் லட்சுமி. லட்சுமி, சுதந்திரப் போராட்ட வீரர் அம்மு சுவாமிநாதன் மற்றும் சென்னையின் உயர்மட்ட வழக்கறிஞரான எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் இரண்டாவது மகள். மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, லட்சுமி திருமணம் செய்துக்கொண்டார். தனது திருமண தோல்வியைத் தொடர்ந்து 26 வயதில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத் தலைவர்களைச் சந்தித்த அவர், அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். 2 ஆவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவத்துடன் தங்கள் பொது எதிரியான பிரிட்டனுக்கு எதிராக ஐஎன்ஏ கூட்டு சேர்ந்தது.
2 ஆவது உலகப் போரில் காயமடைந்த ஜப்பானிய வீரர்களை அவர் பராமரித்தார். நேதாஜி சிங்கப்பூர் வந்தபோது லட்சுமியைச் சந்தித்து ஐஎன்ஏவில் சேர விருப்பம் தெரிவித்தார். நேதாஜி ஜான்சி ராணி ரெஜிமென்ட் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மகளிர் படையின் தலைவராக இருந்தார். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் மகள்கள் படைப்பிரிவில் சேர்ந்து அவர்களுக்கு ஆயுதம் மற்றும் போர் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அவர் ஐஎன்ஏ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பிரேம் சேகலை சிங்கப்பூரில் சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. டிசம்பர் 1944 இல், கேப்டன் லக்ஷ்மியின் ராணி படைப்பிரிவு கர்னல் சேகல் தலைமையிலான ஐஎன்ஏ படைகளுடன் ஜப்பானிய இராணுவத்துடன் பர்மாவிற்கு அணிவகுத்துச் சென்றது.
ஆனால் ஜப்பானிய இராணுவம் பர்மாவில் நேச நாட்டுப் படைகளிடமிருந்து பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டவர்களில் சேகல் மற்றும் லட்சுமி போன்ற ஐஎன்ஏ வீரர்கள் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, லட்சுமி மார்க். கம்யூ. கட்சியில் சேர்ந்தார். பின்னர் ராஜ்யசபா உறுப்பினராகவும், 2002 இல் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஆனார். அவர் வங்காளதேசப் போர் மற்றும் போபால் விஷவாயு துயரத்தின் போது நிவாரண முகாம்களுக்கு தலைமை தாங்கினார். பெண்களின் உரிமைகளுக்காகவும் அழகுப் போட்டிகளுக்கு எதிராகவும் போராடினார். கடைசி வரை, கேப்டன் லட்சுமி கான்பூரில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் தனது கிளினிக்கை நடத்தி வந்தார். பத்மவிபூஷண் விருது பெற்ற லட்சுமி 2012 இல் 97 வயதில் காலமானார்.