
1855 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியாவின் பழங்குடியினர் கிளர்ந்தெழுந்த வரலாற்றுப் போராட்டமே சாந்தலர்கள் கிளர்ச்சி ஆகும். இதனை பழம்பெரும் சாந்தலர்கள் கிளர்ச்சி என்றும் அழைக்கலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சந்தாலி என்ற பழங்குடியினருக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு பிறப்பித்த நியாயமற்ற உத்தரவுகளை எதிர்த்து நடந்ததே இந்தப் போராட்டம் ஆகும்.
இன்றைய ஜார்கண்டிலிருந்து பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் வழியாக ஆகிய 4 மாநிலங்களில் பரவியிருந்தன இந்த பழங்குடிகள். இன்றும் இந்த பழங்குடியினர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கும் நிலமாக இந்த மாநிலங்கள் இருக்கிறது. ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட புதிய நிரந்தர தீர்வுச் சட்டம் பழங்குடிகளிடையே கிளர்ச்சியைத் தூண்டியது. பழங்குடியினரை அவர்களது சொந்த காடுகளில் இருந்து வெளியேற்றுவதற்காக அனைத்து நிலங்களையும் ஏலம் விட ஆங்கிலேயர்களுக்கு இந்த சட்டம் உதவியது.
அவர்கள் தங்கள் சொந்த வன வளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. காடுகள் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய சாந்தல் நிலம் ஜமீன்தார்களுக்கு ஏலம் விடப்பட்டது. வாழ்வாதாரத்தையும் தாயகத்தையும் இழந்த சாந்தல் பழங்குடிகள் ஒன்று சேர்ந்தனர். அவர்களின் தலைவர்களாக 4 சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் செயல்பட்டனர். அவர்கள் சித்து, கன்ஹு, சந்த், பைரவ் மற்றும் அவர்களது சகோதரிகள் ஃபுலோ மற்றும் ஜானோ ஆகியோர் ஆவார்கள்.
1855ம் ஆண்டு, ஜூலை 7 அன்று போகனாதி கிராமத்தில் ஆயிரக்கணக்கான சாந்தல்கள் கூடியிருந்தனர். அவர்கள் தங்களை சுதந்திரமாக அறிவித்து தங்கள் காடுகளை விடுவிக்க உறுதி எடுத்தனர். அப்போது தங்களை மிரட்ட வந்த போலீஸ்காரரை கொன்றனர். மோதல்கள் காட்டுத் தீ போல் பரவியது. ஆங்கிலேயர்கள் மற்றும் ஜமீன்தார்கள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டது.
ஜார்கண்ட் முதல் வங்காளம் வரையிலான காடுகளை சாந்தல்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவித்தனர். கிளர்ச்சியை ஒடுக்க பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ஒரு வருடம் ஆனது. நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ஜமீன்தார்கள் கொல்லப்பட்டனர், சித்து மற்றும் கன்ஹு உட்பட 20000க்கும் மேற்பட்ட சந்தால் வீரர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். கிளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டாலும், ஆங்கிலேயர்கள் வனச் சட்டங்களைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.