India England Series
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னையில் நாளை நடக்கிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிக்கு செல்லும் ரசிகர்களுக்கு மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
mtc bus
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வௌியிட்டுள்ள அறிவிப்பில்: நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சனிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் (TNCA) மா.போ.கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
chennai mtc bus
மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து MAசிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் (Shuttle service) மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. எனவே பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.