இறந்துவிடுவார் என்று நினைத்தேன் – வினேஷ் போகத்தின் கடுமையான பயிற்சி குறித்து பகிர்ந்த பயிற்சியாளர்!

First Published | Aug 19, 2024, 11:54 AM IST

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 இல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 100 கிராம் அதிக எடை காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவரது எடையைக் குறைப்பதற்காக அவர் எவ்வளவு முயற்சி செய்தார் என்பதை விவரித்த அவரது பயிற்சியாளர் வோலர் அக்கோஸ் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கில் அற்புதமான செயல்திறனுடன் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். 50 கிலோ மல்யுத்த பிரிவில் போட்டியிட்ட அவர், உலக சாம்பியன் வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் கடைசிப் போட்டியின் வெற்றி தோல்விகள் ஒரு பொருட்டல்லாமல் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

வினேஷ் போகத்

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, அவர் 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முன்பே வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் அதிர்ச்சி அடைந்தது.

Tap to resize

பாரிஸ் ஒலிம்பிக் 2024 - வினேஷ் போகத்

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் எடை அதிகரித்த வினேஷ் போகத், அதைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் லோபஸ் குஸ்மானை தோற்கடித்த பிறகு, அவர் மீண்டும் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டார். அவரது எடை வரம்பை விட 2.7 கிலோ அதிகமாக இருந்தது. பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், இந்திய அணி மருத்துவர்கள் வினேஷ் எடையைக் குறைக்க தங்கள் பங்கிற்கு முயற்சித்தனர், ஆனால் அவர்களுக்கு போதுமான நேரம் இல்லை.

இருப்பினும், வினேஷ் போகத் எடையைக் குறைக்க மேற்கொண்ட முயற்சியில் அவர் இறந்திருக்கலாம் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்களை வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அக்கோஸ் வெளியிட்டுள்ளார். தங்கப் பதக்கப் போட்டிக்கு முந்தைய இரவு எடையைக் குறைப்பது எவ்வளவு வேதனையானது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

வினேஷ் போகத் பயிற்சி

தற்போது நீக்கப்பட்ட பதிவில், "அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு 2.7 கிலோ கூடுதல் எடை இருந்தது. நாங்கள் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தோம், ஆனால் 1.5 கிலோ இன்னும் மீதமிருந்தது. அதன் பிறகு, 50 நிமிட நீராவிக்குப் பிறகு, அவள் மீது ஒரு துளி வியர்வை கூட இல்லை" என்று வோலர் அக்கோஸ் முகநூலில் எழுதினார்.

வினேஷ் போகத் பயிற்சி

"வேறு வழியில்லை.. நள்ளிரவு முதல் அதிகாலை 5:30 மணி வரை அவர் வெவ்வேறு கார்டியோ இயந்திரங்கள், மல்யுத்த பயிற்சிகள் என இரண்டு மூன்று நிமிட இடைவெளியில் மூன்று முறை உடற்பயிற்சி செய்தார். அதன் பிறகு அவள் மயங்கி விழுந்தாள். ஆனால் நாங்கள் அவளை எழுப்பி விட்டோம். அவள் ஒரு மணி நேரம் நீராவி குளியலில் கழித்தாள்" என்று பயிற்சியாளர் கூறினார். மேலும், வினேஷ் போகத் இறந்து விடுவார் என்று நினைத்தேன். அந்தளவிற்கு அவர் கடுமையாக முயற்சித்தார். முன்னதாக 2015 ஆம் ஆண்டு, 21 வயதான சீன கலப்பு தற்காப்புக் கலைஞர் ஒருவர் தனது சண்டைக்கு முந்தைய நாள் எடையைக் குறைக்க முயன்றபோது கடுமையான நீரிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

Latest Videos

click me!