பிரேசிலின் பீலேவுக்கு அடுத்தபடியாக கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாராக போற்றிப்புகழப்பட்டவர் மரடோனா .இந்த மாத தொடக்கத்தில் அவரது மூளையில் இருந்து இரத்த உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பின்னர், புயனஸ் அயர்ஸின் டைக்ரேயில் மரடோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கிளாரின் செய்தித்தாள் தெரிவிக்கிறது
கால்பந்து உலகில் தனிக்கென தனி சாம்ராஜ்யம் கட்டி ஆண்ட மாரடோனாவின் திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் மாரடோனா குறித்த நினைவுகளை, அவரது பெருமைகளை, திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்றுதந்து பெருமை சேர்த்தவர் மாரடோனா. பார்சிலோனா, நபோலி அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகு காலம் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மாரடோனாவுக்கு ரசிகர்கள் உண்டு. பிரேசிலுக்கு பீலே, அர்ஜென்டினாவுக்கு மாரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்தவர்.
மாரடோனா மறைவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டுப் அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.