ஆன்லைன் உணவு பொருட்கள்
கைக்குள்ளே உலகத்தை அடக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் ஒருபக்கம் மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றால், மறு பக்கம் மோசடி, ஆபாசம் என தீய பழக்கமும் அதிகரித்து வருகிறது. வீட்டிற்குள் இருந்தே கருவேப்பிலை முதல் கார்களை வாங்குவது வரை இன்றைய நாளிலை சாத்தியமாகவிட்டது. அப்படித்தான் மொபைல் போனில் காட்டப்படும் உணவுவகைகளை பார்த்து ரசிப்பது மட்டுமில்லை இதனை சாப்பிட ஆசைப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு உணவுகள்
வெளிநாட்டு உணவுவகைகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவிவிட்டது. அந்த வகையில் பிரைட் ரைஸ், தந்தூர் சிக்கன், கிரில் சிக்கன், சவர்மா, நூடுல்ஸ் போன்ற உணவு வகைகள் தெருவுக்கு தெரு கிடைத்து வருகிறது. இதனை சாப்பிட ஆசைப்பட்டு அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிக்கு அடுத்துள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்,
மொபைல் போனில் விளம்பரம்
இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று இரவு மொபைல் போனில் நூடுல்ஸ் விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து ஆன்லைனில் பிரபல கம்பெணியின் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் வீட்டிற்கு நூடுல்ஸ் வந்துவிட்டது. இதனை விட்டிலையே செய்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார்.
மாணவி மர்ம மரணம்
இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக மாணவியை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவர் தூக்கத்திலையே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அலறி துடித்து மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.