ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்தது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முதலில் 11 பேர் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சியை சேர்ந்தவர்கள் சிக்கினர்.
சிறையில் இருந்து ஸ்கெட்ச்
இதுவரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆமஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஸ்கெட்ச் போட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
வெளிநாட்டிற்கு தப்பி சென்ற மொட்டை கிருஷ்ணன்
இந்தநிலையில் இந்த கொலைக்கு மூல காரணமாக இருந்தது ரவுடி சம்போ செந்தில் என கூறப்படுகிறது. இவரை கைது செய்ய பல இடங்களுக்கும் தனிப்படை சென்ற நிலையில் தப்பித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்மோ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணன் குடும்பத்தோடு வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது இதனையடுத்து மொட்டை கிருஷ்ணனின் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்சன் மனைவியிடம் விசாரணை
அந்த வகையில் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி மொட்டை கிருஷ்ணனோடு நெல்சன் மனைவி மோனிஷா தொலைபேசியில் பலமுறை பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது ஒரு வழக்கு தொடர்பாக மொட்டை கிருஷ்ணனிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.