வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவ்வப்போது விபச்சார தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் பகுதியில் சில தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள சலீம் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மப்டியில் இருந்த போலீசார் அந்த விடுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து, அந்த விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அங்கு விபச்சார தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து தனியார் தங்கும் விடுதியில் இருந்த இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், மேலாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளர் கபீர் முகமதுவை போலீசார் தேடி வருகின்றனர்.