ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடர், இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் வருகிற மார்ச் 31-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. கடந்த சீசனைப் போல் இந்த ஆண்டும் மொத்தம் 10 அணிகள் மோத உள்ளன. இதில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான் இந்தப் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டி தொடங்கும் முன் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் துவக்க விழா நடத்தப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகள் கொரோனா பரவல் இருந்ததன் காரணமாக துவக்க விழாவை தவிர்த்து வந்தனர். அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த ஆண்டும் துவக்க விழா ரத்து செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... Bakasuran OTT: செல்வராகவன் நடிப்பில் பட்டையை கிளப்பிய கிரைம் திரில்லர்... 'பகாசுரன்' ஓடிடி ரிலீஸ் தேதி இதோ.!
இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளாக துவக்க விழா இன்றி ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் மீண்டும் துவக்க விழா உடன் ஆரம்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வெறும் அரை மணி நேரம் மட்டும் இந்த துவக்க விழா நடைபெற உள்ளதாம். இதில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்களாம். வருகிற மார்ச் 31-ந் தேதி இரவு 7.30 மணிக்கு இந்த துவக்க விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.