முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்யவுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.
ஒரு வரலாற்று காவியமாக மனதில் நிலைக்க வேண்டிய இந்த படம், இயக்குனரின் சில தவறுகளால் ஒரு திரைப்படமாகவே பார்க்கப்படுவதாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
ஜெயலலிதா நடிக்க துவங்கியது முதல், அவர் 1991 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆனது வரையிலான இடைப்பட்ட சில சம்பவங்களில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பதாகவும், சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் இது ஒரு வரலாற்று படம் என்றால் கூட, ஜெயலலிதா பெயரை ஜெயா, என்றும் சிலரது பெயர்கள் மாற்றம், கட்சியின் பெயர்கள் மாற்றத்தால் மனதில் நிற்கும்படியாக இல்லை. முக்கியமாக கங்கனா ஜெயலலிதா போல மாறி நடிக்க முயற்சித்திருப்பது அப்பட்டமாக தெரிவதால் இவரது நடிப்பு எடுபடவில்லை என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், வெளியான 24 மணிநேரத்தில்... தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.