அரசியல் இமேஜை நிலை நிறுத்தி கொள்ள, வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மற்ற கட்சிகளில், வேட்பாளர்களே, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்வதாக, புலம்பி வருகின்றனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான மனுத்தாக்கல், பிரியாணி, குவாட்டர் பாட்டில் என படு அமர்க்களமாக திருவிழா போல துவங்கியது. தொடர்ந்து, இறுதியாக களத்தில் உள்ள வேட்பாளர்கள், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தவே, அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு துட்டு கொடுப்பது வழக்கம்.
ஆனால், தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளநிலையில் செலவுக்கே காசு இல்லாமல் திணறி வருகின்றனர். அதனால், கூட்டணி கட்சி தொண்டர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் பிரசாரத்தில் பரபரப்பே இல்லாமல் டல்லாக இருக்கிறது. எப்போதுமே இந்தமாதிரியான இவ்விஷயத்தில், அதிமுக, எப்போதுமே முந்திக் கொள்ளும். ஆனால் இந்த முறை கூட்டணி கட்சியான, பாமகவிற்கு, தொகுதியை ஒதுக்கியதால், துட்டு விஷயத்தில் மவுனமாக உள்ளனர்.
பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் கட்சி நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்களுக்கு துட்டு சப்ளை செய்து, கலகலப்பாக்குவார் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்பு பொய்த்துப்போகவே தொண்டர்களின் சுருதி குறைந்துள்ளது. இதேபோல், திமுகவிலும், கவனிப்பு இல்லாததால், விசிக வேட்பாளர் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, உற்சாகம் குறைந்துள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள தெருக்களில், எத்தனை ஓட்டுகள் இருக்கிறது, அவற்றில், அதிமுக - திமுகவுக்கு கிடைக்கும் ஓட்டுகள் எத்தனை, பிற கட்சி ஓட்டுகள் எத்தனை போன்ற விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு வார்டு பிரதிநிதிகளிடம் தயார் நிலையில் உள்ளது. இவற்றை கொண்டு, எளிதாக பட்டுவாடாவை முடித்து விடலாம் என, கணக்குப் போடப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் காசு வந்து சேராததால், நிர்வாகிகள், தொண்டர்கள் சுறுசுறுப்பு இல்லாமல் உள்ளனர்.
அமமுக சார்பில், தேர்தல் பிரசாரம் துவங்கியிருந்தாலும், பிரசாரத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு, பெட்ரோல் போடக் கூட காசு கொடுக்காததால் வேட்பாளர் லேட்டாக பிரசாரத்திற்கு போகிறாராம். தேர்தல் களத்தில், பிரதான கட்சி வேட்பாளர்களே, பணம் இல்லாமல் திணறுவது பரிதாபமாக உள்ளது. அரசியல் இமேஜை நிலை நிறுத்தி கொள்ள, வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மற்ற கட்சிகளில், வேட்பாளர்களே, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்வதாக, புலம்பி வருகின்றனர்.