எலெக்ஷன் செலவுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பணம் கண்ணு இது. வேணாமுன்னு சொல்லாம வெச்சுக்க. நாலு இடத்துக்கு போறப்ப விசாலமா செலவு பண்ணி ஓட்டு கேளு என்று வெள்ளந்தியாய் ஒரு வயதான பாட்டி ஒருவர் வேட்பாளருக்கு பணம் கொடுத்தார்.
எலெக்ஷன் செலவுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பணம் கண்ணு இது. வேணாமுன்னு சொல்லாம வெச்சுக்க. நாலு இடத்துக்கு போறப்ப விசாலமா செலவு பண்ணி ஓட்டு கேளு என்று வெள்ளந்தியாய் ஒரு வயதான பாட்டி ஒருவர் வேட்பாளருக்கு பணம் கொடுத்தார்.
தேர்தல் அரசியல் மாறிப்போய்விட்டதுதான். ஓட்டுப்போட பணம், ஓட்டுக்கள் கிடைத்து வென்றுவிட்டால் பணம் சம்பாதிப்பது மட்டும்தான் இலக்கு என்றுதான் சூழல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் அதையும் தாண்டி, பாலைவன சோலை போல ஆங்காங்கே இன்னமும் சில பழைய நம்பிக்கைகள் பூத்துத்தான் கிடக்கின்றன. பதவியை வைத்து பெரிதாய் சம்பாதிக்க அரசியல்வாதிகளும், அவர்களை முழுமையாய் நம்பும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! என்பதற்கு பெரிய உதாரணம் கணேசமூர்த்தி. அவரின் நேர்மையை மக்கள் மதிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே மிகப்பெரிய உதாரணம்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈரோடு மாநகர பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். வண்டியூரான் கோவில் பகுதியில் துவங்கி பின் கொங்கம்பாளையம் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது கணபதி நகர் அருகே வந்தபோது கணிசமான பெண்கள் ஆரத்தி தட்டுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கணேசமூர்த்தியை எதிர்கொண்டு ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். கூப்பிய கரங்களுடன் அவர் நகர்ந்தபோது, எங்கிருந்தோ வந்த ஒரு வயதான பெண், சட்டென கணேசமூர்த்தியை கையை பிடித்து இழுத்தார். இவர் ‘என்னங்மா?’ என்றபடி திரும்ப, அவரது சட்டைப் பையினுள் சில நூறு ரூபாய் நோட்டுக்களை திணித்தார் அந்த வயதான பெண்மணி. வேட்பாளர் அதிர்ந்து போய் ‘இதெல்லாம் வேணாம்! எதுக்கு எனக்கு பணம் தர்றீங்க?’ என்று கேட்டதும்...
“நீ மத்த கட்சி அரசியல்வாதி மாதிரி இல்ல கண்ணு. பதவிய வெச்சு பணம் சம்பாதிக்காதவன்னு எங்களுக்கு தெரியும். ஆனா இன்னைக்கும் காலம் மாறி கெடக்குது, பணம் கொடுத்தால்தான் சில பேர் ஓட்டு போட் ரெடியாகுறாங்க. ஆனா நாங்க அப்படியில்லைங்க. நல்ல மனுஷன் நீங்க எங்க எம்.பி.யா வரோணும்! இந்த மக்களுக்கு ரோடு, பாலம், ஸ்கூலு, வயசானவங்க பென்ஷன் அப்படின்னு நிறைய தேவைகளை பார்த்துப் பார்த்து பண்ணோணும்.
அதுக்குதான் எலெக்ஷன் செலவுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பணம் கண்ணு இது. வேணாமுன்னு சொல்லாம வெச்சுக்க. நாலு இடத்துக்கு போறப்ப விசாலமா செலவு பண்ணி ஓட்டு கேளு.” என்று வெள்ளந்தியாய் பேசினார்.
இதைக்கேட்டு உடைந்தே போய்விட்ட கணேசமூர்த்தி, அந்த பெண்மணியை கையெடுத்து கும்பிட்டு “உங்கள மாதிரி நாலு பேர் இருக்கப்போயிதான் ஊர்ல மழை பெய்யுதுங்க. பொதுவா அரசியல்வாதிட்ட மக்கள்தான் பணம் கேட்பாங்க, ஆனா என்னோட நிலைமையை தெரிஞ்சு வெச்சிருந்து எனக்கு பணம் கொடுத்து உதவுறீங்க.
தேர்தல்ல நான் ஜெயிக்கிறது இருக்கட்டுமுங்க, உங்க மனசுல நான் ஜெயிச்சுட்டேனுங்க. அது போதுமுங்க.” என்று அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டே நடந்துவிட்டார்.
இந்த காட்சிகளை கவனித்த கூட்டணி கட்சியினர் மிரண்டுபோனார்களாம். ”ஆரத்தி எடுக்கிறதே கலெக்ஷனுக்காகத்தான்.
அதிலேயும் பணத்தை குறைவா கொடுத்தால், வேட்பாளரோட சட்டையை பிடிச்சு இழுக்காத குறையா அதிக பணம் கேட்டு நச்சரிக்கிற மக்களை பார்த்திருக்கோம். இதென்னடா அரசியல் அதிசயம்! இப்படியொரு வேட்பாளர், இப்படியான மக்கள்!” என்று அதிர்ந்திருக்கின்றனர் ஆச்சரியத்தில்.