வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் குடி போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
வசமாக சிக்கிய காதல் ஜோடி :
விசாரணையின் போது அவர்கள் தாங்கள் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து முழு கஞ்சா போதையில் இருந்த இரண்டு பேரையும் சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடியை ஆட்டோவில் கடத்தி பணம், நகை, வழிப்பறி செய்ததாகவும் பின்னர் ஆண் நண்பருடன் வந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பழைய காட்பாடியில் உள்ள திரையரங்கில் தனது ஆண் நண்பருடன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்த இளம்பெண்ணை, அந்த வழியாக ஷேர் ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த நகை மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பிடுங்கி கொண்டதுடன், இருவரையும் ஆட்டோவில் கடத்திச் சென்றனர்.
சுடுகாட்டில் பாலியல் கொடுமை :
இதனையடுத்து வேலூர் சத்துவாச்சாரி பாலாற்றங்கரை சுடுகாடு அருகே ஆட்டோவை நிறுத்தி இளம் பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு இளம்பெண்ணிடம் இருந்த நகை செல்போன்களை பறித்துக் கொண்ட அந்த கும்பல், மயானத்தில் இருந்த மண்டபத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இளம்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டனர்.
இளம் பெண்ணின் ஆண் நண்பர் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரத்தை ஏடிஎம் மூலம் எடுத்த அந்த கும்பல் அதனை பங்கிடும் போது ஏற்படும் தகராறில் போலீசில் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் ஏடிஎம் கணக்கு எண்ணை வைத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.