பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குடிமகனை தர்ம அடி கொடுத்து வெளுத்த பொதுமக்கள்.
சேலம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி கிராமம் வனிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. கடந்த 26-ந் தேதி காலை வழக்கம் போல 8 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வந்து இருந்தார். அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் காலை நேரத்திலேயே அருகிலுள்ள சந்து கடையில் மதுவை வாங்கி வந்து பள்ளியில் வைத்து குடித்துள்ளார். மேலும் மாணவி தனியாக இருப்பதை கண்டு அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் பழனிசாமி ஈடுபட்டுள்ளார். மாணவி செய்வது அறியாமல் திகைத்து போய் கூச்சலிட்டுள்ளார்.
உடனே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இதுபற்றி தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் என்பவரிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியர் செல்வம் இதுபற்றி காவல்துறையிடமோ, கல்வி உயர் அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தாங்களாகவே போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.
இதைத்தொடர்ந்து நடந்த சம்பவத்தை மறைத்து புகார் கொடுக்க விடாமல் இடையூறு செய்ததாக கூறி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருமை ஆறுமுகம் பொதுமக்கள் சார்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார். அதன்படி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணிக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர்.
அங்கு அவர்கள் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியம், தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவராஜ் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். அங்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது பாதிக்கப்பட்ட மாணவிகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தலைமை ஆசிரியரை வேறுபள்ளிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தலைமை ஆசிரியர் செல்வம் பள்ளிக்கு வர அனுமதி கிடையாது. பள்ளிக்கு தற்காலிக தலைமை ஆசிரியரை நியமிக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு விசாரணை குறித்த தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார்.