காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சிறுமியைக் கொன்று உடலை கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வழக்கில் போலீசார் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். மேலும் ஒரு சிறுவனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
"முதன்மைக் குற்றவாளியான 15 வயது சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது இரண்டு கூட்டாளிகளான சமீர் (19) மற்றும் குலாம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
undefined
செப்டம்பர் 24 அன்று, சிறுமியின் தாய்வழி தாத்தா செப்டம்பர் 23 அன்று தனது பேத்தியை கடத்தியதாக குற்றம் சாட்டி மூன்று நபர்களுக்கு எதிராக ராம்கர் சேத்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியை தேடும் பணி தொடங்கியது.
ஞாயிறு மதியம், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கிராமத்தின் நடுவில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை ராம்கார் சேத்தனில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சிறுமியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என போலீசார் கூறுகின்றனர்.
"பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் சிறுமியின் வீட்டை நெருங்குவதையும், வெளியேறுவதையும் காணமுடிகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு கையில் காயம் உள்ளது" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
சிறுமியின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை சர்தார்சேஹரில் உள்ள ஜஸ்ராசர் கிராமத்தில் நடைபெற்றதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். சிறுமி படிப்பதற்காக லாவண்டா கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
(பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்தச் செய்தியில் பாதிக்கப்பட்டவரின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.)