சிறுமி சனிக்கிழமையன்று தனது டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றபோது சிறுவன் தன்னுடன் தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமையன்று ஆறு வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சையில் இருப்பதால் குழந்தையின் வாக்குமூலத்தை இதுவரை போலீசார் பதிவு செய்யவில்லை.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி சனிக்கிழமையன்று தனது டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றபோது சிறுவன் தன்னுடன் தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
"இரவு 7:30 மணியளவில் அவள் வீட்டிற்கு வந்தபோது, நடந்ததை எங்களிடம் கூறினாள். குற்றம் சாட்டப்படும் சிறுவனை அவளுக்குத் தெரியும். நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் பையனின் வீட்டிற்குச் சென்று, நடந்ததைக் கூறி போலீசில் சிறுவனை ஒப்படைத்தோம்" என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் பாதிக்கப்பட்ட சிறுமியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்க, சம்பவம் நடந்த கிராமத்தில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) சுகன்யா ஷர்மா, “சிறுமியின் உடல்நிலை சீராக இல்லை. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார். அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதியாகி இருக்கிறது. சிறுவன் மீது போக்சோ உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சிறுவனை சிறார் இல்லத்தில் ஒப்படைப்போம்” எனவும் அவர் கூறினார்.