May 31, 2018, 3:40 PM IST
சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதன் மூலம் பிரபலமானவர் நடிகர் விக்னேஷ் கார்த்திக். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பணிகளையும் செய்து வந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் “பகல் நிலவு” எனும் தொடரில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து வருகிறார்.
இவர் தனது முகநூல் பக்கத்தில் ரஜினியின் அரசியல் வரவை குறித்து கேலியாக ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் ”ரஜினி அரசியலுக்கு வருவது, இயக்குனர் ஹரி மாற்று சினிமா இயக்குவது போல, சற்றும் பொருந்தாமல் இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் ஹரி என்றாலே ஆக்ஷன் ப்ளஸ் கமர்ஷியல் தான். அவர் மாற்று சினிமா எடுக்கிறார் என்றால் அது நம்ப முடியாத ஒன்றும் கூட. அது போல ரஜினியின் அரசியல் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. என கார்த்திக் கருத்து தெரிவித்திருப்பதை பலர் வரவேற்றிருக்கின்றனர்.
ஆனால் “ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அதற்கு முன்னதாக அவரை பற்றி தீர்மானிக்காதீர்கள்” என சிலர் பதிலடியும் கொடுத்திருக்கிறார்கள்.
முன்னதாக நேற்று நடந்த தூத்துக்குடி மக்களிடையேயான ரஜினியின் சந்திப்பின் போது, அவர் “ சில சமூக விரோதிகள் தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம். போராட்டம் என்று போனால் நாடே சுடுகாடாகிவிடும்” என்றெல்லாம் பேசியது மக்கள் மனதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில், இது போல தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.