மக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் "பசுமை வழிச்சாலை"

Jul 25, 2018, 2:28 PM IST



தமிழ் திரையுலகில் தற்போது, உண்மை கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 'பசுமை வழிச்சாலையை' மையமாக வைத்து இயக்குனர் சந்தோஷ் கோபால், ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சத்வா புரோடக்ஷன் தயாரிக்கிறது.

வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுவதாகவும், நூற்றாண்டுகள் வாழ்ந்த பகுதியை விட்டு எங்கே செல்வது என தெரியாமல் அழுது புலம்பும் சாமானிய மக்கள் குரல்களை நேரடியாகவே பதிவு செய்துள்ளார் இயக்குனர். உண்மையில் பசுமை வழிச்சாலை வளர்ச்சியா என கேள்வியை எழுப்பும் நோக்கத்தில் இந்த படம் இருக்கும் என கூறியுள்ளார் இயக்குனர் சந்தோஷ் கோபால்.

மேலும் இந்த படத்தில் உண்மையான அந்த மக்களின் பதிவுகளையும், அந்த இடங்களில் பதிவுகளோடு கலந்த சரித்திரம் பேசும் படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அதேபோல் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மாற்றங்களால் உருவாகும் பயத்தையும், அந்த சூழலில் மக்களின் உணர்வுப்பூர்வ பதிவுகளையும் கொண்ட திரைப்படமாக 'பசுமைவழிச்சாலை' அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது படப்பிடிப்பு, தொடங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களின் அழுகுரலோடு இணைந்த டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது..