Dec 13, 2017, 7:15 PM IST
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது பார்ட்டி படத்தின் டீசர். ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 'Venkat Prabhu Hangover' என துவக்கமே மிரட்டலாக இருக்கிறது
பார்ட்டி என்ற பேருக்கு ஏற்ப, கிளாமரில் கலக்கியிருக்கிறார்கள் ‘ஏ’கப்பட்ட நடிகைகள். தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவரின் கைவண்ணத்தில் உருவான ’பார்ட்டி’ டீசர் இப்போது வெளியாகி ஆறரை லட்சம் பேரால் யு டியூபில் பார்க்கப்பட்டுள்ளது.
டீசரே கலக்கியிருக்கிறார்கள். மோடியின் முகத்துடன் தொடங்குகிறது டீசர். பேசத் தொடங்குகிறார் மோடி... அதற்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நகர்கிறது டீசர். பாண்ட்... பாண்ட்... எங்கே அந்த பாண்ட் என்று கேட்க, ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஸ்க்ரீனில் காட்சிகள் கிராபிக்ஸில் ஐக்கியமாகின்றன. அவரு லண்டன்ல இருக்காரு என்று சொல்ல... டீசரின் முடிவில் ரூ.500, ரூ.1000ம்லாம் இனிமே செல்லாது என்று மோடி அறிவிக்கும் அறிவிப்புடன் பார்ட்டி டீசர் முடிகிறது.
பார்ப்போம், படம் எந்த அளவுக்குச் செல்கிறது என்று. நகைச்சுவை கலந்த படம் என்று சொல்லியிருக்கிறார்கள். மோடியின் அறிவிப்பும் பின்னர் வந்த குரல்களுமேகூட ஒரு நகைச்சுவையாகிப் போனதால், பார்ட்டி எப்படி பார்ட்டி கொண்டாடுகிறது என்ற ஆர்வம் முளைக்கிறது.
சென்னை 600028 - 2 படத்துக்குப் பின் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘பார்ட்டி’யில் ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் நால்வரும் கிளாமரில் கலக்கியிருக்கிறார்கள்.
ஷிவா,ஜெய், நாசர், சத்யராஜ் என மிரட்டல் பட்டாளத்துடன் பார்ட்டி டீசர் வந்திருக்கிறது.
வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் எட்டாவது படம் இது.