மகள் கொடுத்த புத்தாண்டு பரிசு..! ஆனந்தத்தில் அழுத எம்.எஸ்.பாஸ்கர்..! (வீடியோ)

Jan 2, 2018, 1:35 PM IST



தமிழில் மொழிமாற்றப்பட்ட ஹாலிவுட் படங்கள் பலவற்றுக்கு தன்னுடைய குரலால் உயிர் கொடுத்தவர், நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான எம்.எஸ்.பாஸ்கர். இவர் காமெடி வேடத்தில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார்.  

இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளவர். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். 

தந்தையைப் போலவே, இவருடைய மகள் ஐஸ்வர்யாவும், பல தமிழ்ப் படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தைக்கு புத்தாண்டிற்காக சர்ப்ரைஸ் பரிசாக ராயல் என்பீல்டு பைக் வாங்கி பரிசளித்துள்ளார்.

தன் அம்மா மற்றும் சகோதரரிடம் ரகசியமாக இந்தத் தகவலைக் கூறி, தனது தந்தையை பெசன்ட் நகர் பீச்சுக்கு வரவழைத்தார். ஐஸ்வர்யா சொன்னது போலவே அவர்களும் சரியான நேரத்திற்கு வந்தனர். 

திடீர் என எம்.எஸ்.பாஸ்கர் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த சிவப்பு நிற துணியால் கண்களை கட்டி கொஞ்ச  தூரம் நடந்தே அழைத்துச் சென்றனர். ஒன்றும் புரியாமல்... தன்னுடைய மனைவியைப் பிடித்தவாறு எம்.எஸ்.பாஸ்கர் நடக்க, அவரை அவருடைய மகள் அழைத்துச்சென்றார்.

பைக்கின் அருகே தன் தந்தையை நிறுத்தி விட்டு... அவருடைய கண்களில் கட்டி இருந்த சிவப்புத் துணியை அவிழ்த்தார். பைக்கைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் சிறு குழந்தை போல்.. என்ன இது என்று அவர் கேட்க, அதற்கு அவருடைய மகள் உங்களுக்குத் தான் எனக் கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பின் அருகில் இருந்த மனைவி, மகன், மகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்து சொல்லும்போது... அவருடைய ஒரே மகள் ஐஸ்வர்யா அழத் தொடங்கிவிட்டார். மகள் கொடுத்த பரிசைப் பார்த்து மெய் மறந்த எம்.எஸ்.பாஸ்கர் மகளை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீருடன்  அன்பாக முத்தமிட்டார். இந்த அழகான அப்பா மகள் அன்புக் காட்சிகள், பெசன்ட் நகர் கடற்கரையில் கூடி இருந்த அனைவரையுமே மெய் சிலிர்க்க வைத்தது. 

ஏற்கெனவே, எம்.எஸ்.பாஸ்கரிடம் பல லட்சம் மதிப்பில் கார்கள் இருந்தாலும், மகள் குரல் கொடுத்து, வாங்கிக் கொடுத்த 2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு பைக்கில் கம்பீரமாக அமர்ந்து பீச்சையே ரவுண்டு அடித்தார். 

இந்த சம்பவத்தின் வீடியோ தொகுப்பு: