1.. வெள்ளிக் கெண்டை:

இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இம்மீனின் உடல் பக்கவாட்டில் தட்டையாகவும், வெள்ளி போன்ற சிறிய பளபளப்பான செதில்களையும் கொண்டிருக்கும்.

நீரின் மேல்மட்டத்திலுள்ள தாவர நுண்ணுயிர் மிதவைகள் (phytoplankton) இம்மீனின் முக்கிய உணவாகும்.

இதற்கேற்ப இம்மீனின் வாய் மேல்நோக்கி அமைந்திருப்பதோடு செவுள் அரும்புகளும் மிகவும் சிறியவையாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும்.

தாவர நுண்ணுயிர் மிதவைகள் தவிர விலங்கு நுண்ணுயிர் மிதவைகள், அழுகிய தாவரங்கள் போன்றவற்றையும் வெள்ளிக் கெண்டை ஓரளவு உண்ணும்.

இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1 ½  - 2 கிலோ கிராம் எடை வரை வளரும்.

2.. புல்கெண்டை:

இம்மீன் சிறிய தலைமையும், நீண்ட உடலையும் கொண்டது. இதன் உடலில் மேல்பகுதி சாம்பல் கலந்த பச்சை நிறத்துடனும், வயிற்றின் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும்.

சீன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புல் கெண்டை மீன் நீரிலுள்ள தாவரங்களையும், புல் இனங்களையும், பாசிகளையும் விரும்பி உண்ணும்.

இவை தவிர நாம் அளிக்கும் காய்கறிக் கழிவுகள், மரவள்ளி இலைகள், வாழை இலை மற்றும் மேலுணவு போன்றவற்றையும் விரும்பி உண்ணும்.

இதன் உணவுப் பழக்கத்தால் இம்மீன் இனம் நீர் நிலைகளில் அபரிதமாக வளருகிற நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது.

ஓராண்டு வளர்ப்பு காலத்தில் சராசரியாக சுமார் 1 - 1 ½  கிலோ எடை வரை வளருகிறது. இம்மீன் இனம் நுகர்வோர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை மற்றும் புல்கெண்டை ஆகிய இனங்கள், இரண்டாம் வயது முடிவில் இனவிருத்திக்குத் தயாராகின்றன.

இணக்கமான தட்பவெப்ப சூழலில், ஆறு போன்ற ஓடுநீர் நிலைகளில், இயற்கையாகவே இனவிருத்தி செய்யும் இம்மீன்களை, குளங்களில் தகுந்த தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் போது, தூண்டுதல் இனப்பெருக்க முறை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.