கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களையே நுண்ணுயிரிகள் என்கிறோம். இவை பயிர்களுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக பயிர்சாகுபடியில் சத்துக்கள் தரவல்லவை நுண்ணுயிர் உரமாகும்.

இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகச்சிறந்த நுண்ணுயிர் உரமாக இருக்கின்றன.

வேர் உட்பூசணத் தாவர கூட்டு வாழ்க்கை

வேர் உட்பூசணங்கள் மண்ணில் சிதல்லித்தாகவும், பூஞ்சாண இழைத்தண்டுகளாகவும் காணப்படும். வேர் உட்பூசணம் வளர ஆதாரத் தாவரம் தேவை. அவ்வகை ஒத்த பயிர்கள் மண்ணில் பயிரிடப்படும் போது மண்ணில் இருக்கும் வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து மண்ணில் வளரத் தொடங்கும் தாவரத்தின் வேரை சூழ்ந்து கொண்டு தானும் வளரத் தொடங்குகின்றன.

வேரில் ஒட்டிக் கொண்டு இவ்வாறு வளரும் உட்பூசணங்கள் அப்ரசோரியா எனும் பூஞ்சாண தொகுப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேரினுள்ளும் நுழைகின்றன. வேரிலிருந்து பூஞ்சாண இழைகள் மண்ணில் சென்று ஊட்டங்களை கிரகின்றன.

வேரினுள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூஞ்சாண இழை முளைத்து பயிர் உயிரணுக்களின் உள்ளே சென்று அர்பஸ்குல்ஸ் என்னும் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது. இந்த உறிஞ்சிகள் தான் ஊட்டச்சத்தை பரிவர்த்தனை செய்யும் மையமாக செயல்படுகின்றன.

வேர் உட்பூசண செயல்பாடு

பூசணத்தின் வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. ஆகவே, தாவரத்தின் வேர் பரவ முடியாத இடத்திற்கு கூட இந்த பூசணங்கள் பரவி சத்தை கிரகித்து வந்து தாவரத்திற்கு கொடுக்கிறது. குறிப்பாக வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பூசணங்கள் கிரகித்து தனது இழைகளின் மூலம் தான் சார்ந்திருக்கும் தாவரத்திற்கு கொண்டு வந்து தருகிறது. இவ்வாறு மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன், கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்றவற்றையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.

வேர் உட்பூசணம் வளர்க்கும் முறை

இதர நுண்ணுயிர்களை போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்க முடியாது. இது தாவர வேர்களிலேயே இயற்கையாக வளரக்கூடியது.  எனவே, வேர் உட்பூசணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மிகுலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல்வகைகளின் வேரில் வளர்க்கப்படுகிறது. பூசணம் வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரின் வேரும் வேர் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலிதீன் பைகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகின்றது.

உபயோகிக்கும் முறைகள்

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவும்.

பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும் பொழுது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் கலந்து பாலித்தீன் பைகளில் இடவும்.

வளர்ந்த பயிர்களுக்கு ஒரு மரத்திற்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும். வேர் உட்பூசணத்தை வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.

வேர் உட்பூசணத்தின் பயன்கள்

1.குறுகிய காலப்பயிர்களான பயறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றில் மகசூலை அதிகப்படுத்துகின்றது.

2.வேர் உட்பூசண நுண்ணுயிர் உரம் ஊட்டங்களை பயிர்களுக்கு நன்கு கொடுக்கின்றது.

3.வளர்ச்சி ஊக்கிகளை சார்ந்து பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.

4.வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கின்றது. மண்ணின் கட்டமைப்பை அதிகரிக்கின்றது.

5.பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் வலிமையை தருகின்றது.

6.மண்ணின் நிறம், நிலத்தின் உலர் தன்மையை பயிர் தாங்கி வளர வழி செய்கின்றது.