மீன் பண்ணை அமைக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளவும்...
மீன் பண்ணை அமைப்பு
மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் அதிக இடர்பாடுகளின்றி அதிக செலவில்லாமல் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் போது கீழ்க்காணும் குறிப்புக்களை கவனத்தில் கொள்வது நல்லது:
குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல் அதிக மேடு பள்ளங்கள் மற்றும் தாவரங்களின்றி சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள் கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை
குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களி, வண்டல் மற்றும் மணல் கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும்.
எனவே சுமார் 30 முதல் 40 சதம் களித்தன்மையுடைய நிலம் மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்
மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.
நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும் சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்
மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் கொண்ட இடமாயிருப்பின், அவற்றில் அதிகச் செலவின்றி மீன் பண்ணைகள் அமைத்து இலாபம் பெற்றிடலாம். குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின் சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.