அதிக சத்துகள் கொண்ட மண்புழு உரத்துக்கு மண்புழு தேர்வு முக்கியமானது. இதற்கு ஆப்பிரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மட்கும் மண்புழு போன்றவை சிறந்தவை.

உரம் தயாரிக்க, நிழலுடன் அதிகளவு ஈரப்பதமும், குளிர்ச்சியுமான இடம் இருக்க வேண்டும். மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணைக் கட்டடங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

நெல் உமி, தென்னை நார்க்கழிவு, கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு பரப்பி, ஆற்று மணலை அந்தப் படுக்கையின் மேல் 3 செ.மீ. உயர்த்துக்கு தூவவேண்டும்.

பின்னர் 3 செ.மீ. உயரத்துக்கு தோட்டக்கால் மண்ணைப் பரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும்.

கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மலர் அங்காடிக் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்கச் சிறந்தவை.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட படுக்கையில் ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ மண்புழுக்களைத் தூவ வேண்டும்.

இதனையடுத்து, வாரம் ஒரு முறை படுக்கையின் மேல் பகுதியில் உள்ள உரத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.

மண்புழு வெளியில் தெரியும் நிலை வரை அறுவடை செய்யலாம். சிறிய படுக்கை முறையில் கழிவுகள் முழுவதும் மக்கிய பின் அறுவடை செய்தால் போதுமானதாகும்.

சேகரிக்கப்பட்ட உரத்தை ஈரப்பதத்துடன் திறந்த வெளியில் சேமித்து வைக்க வேண்டும்.