மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை இந்த இயற்கை பொருட்களை கொண்டும் கட்டுப்படுத்தலாம்...
இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
நோய்/பூச்சி - தீர்வு
** அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி - ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்
** இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா - 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
** நெல் குலை நோய் - வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
** அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ - 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
** நெல் இலைச் சுருட்டுப் புழு - 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
** அனைத்து காய் துளைப்பான் பூச்சிகள் - 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்
** வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் - 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம்