நாற்றுகள் உற்பத்தி :

தேக்கு நாற்றுகள் பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் எழுப்பலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீத மணலும் 25 சதவீத செம்மண்ணும் 25 சதவீத வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். 

தாய்பாத்தியின் மேல்சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மண்ண்ல் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும். 

பூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும். 

அதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை “பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும்”. பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள்வரை முளைத்து கொண்டிருக்கும். 

இந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும். தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும். 

மேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க தகசாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.