இனப்பெருக்கத்திற்கு உதவும் பொலி கிடாக்களை பராமரிக்கும் முறை:

** தேர்ந்தெடுக்கப்பட்ட கிடாக்குட்டிகளுக்கு மேய்ச்சலுடன் தனியாக 100 கிராம் அளவு அடர்தீவனம் மற்றும் சுத்தமான தண்ணீர் தர வேண்டும். இனப்பெருக்கத்திற்கு விடும் முன்னால் கிடாக்களின் இனப்பெருக்க உறுப்பை சுற்றி உள்ள உரோமத்தை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். 

** காலின் குளம்பை சீராக வெட்டி விட வேண்டும். கிடாக்களை தனியாக கட்டி போடாமல் சுதந்திரமாக அதன் கொட்டகையில் உலாவ விட வேண்டும். கிடாக்களுக்கு மற்ற ஆடுகளுக்கு போடுகின்ற தடுப்பூசிகளையும், குறிப்பாக துள்ளுமாரி, கோமாரி நோய்களுக்கான தடுப்பூசிகளையும், குடற்புழு நீக்கமும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்ய வேண்டும். 

** இனச்சேர்க்கைக்கு விடும் பெட்டை ஆட்டின் இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் சாணம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஒரு கிடாவையும், ஒரு பெட்டை ஆட்டையும் விட்டு மூன்று முறை இனச்சேர்க்கை நடந்த பின் கிடாவையும், பெட்டை ஆட்டையும் பிரித்து விட வேண்டும். 

** காலையில் வெயில் வரும் முன்பு இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு பிறகு கிடாக்களை உடனே மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

** பொதுவாக, பொலி கிடாக்களை ஒன்று முதல் 6 வயது வரை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து ஒரே கிடாவை பயன்படுத்தினால் சில மரபியல் தொடர்பான நோய்கள் வரக்கூடும். 

** எனவே, ஒரு கிடாவை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு அவற்றை பண்ணையில் இருந்து நீக்கி விடலாம். தரமுள்ள பொலி கிடாக்களும், பெட்டைகளும் உள்ள பண்ணைகளில் மிகச்சிறந்த ஆட்டு குட்டிகளை விவசாயிகள் தொடர்ந்து பெற முடியும்.