இந்த இரண்டு நோய்களால் தான் வாழையில் பெருத்த சேதம் ஏற்படும்; கட்டுப்படுத்தும் முறை உள்ளே...
1.. மடல் தேமல் நோய்
இந்த நோய் நச்சுயிரி நோய். அசுவினி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சுப் பூச்சிகளால் இந்த நோய் பரவும். நோய் தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப் பகுதியில் செந்நிற கோடுகள் காணப்படும். ஆண் பூ மடல்களில் நீளவாக்கில் கரும் திட்டுகள் காணப்படும். காய்களின் மீது கரும்பச்சை நிற தேமல் தோற்றமும் காணப்படுவதுடன் தார்களின் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நோய் தாக்கிய மரங்களிலிருந்து கன்றுகளை நட பயன்படுத்தக் கூடாது. நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்க மோனோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் டெமட்டான் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மாதம் ஒருமுறை தெளிக்கவும்.
2.. வெள்ளி தேமல் நோய்
இந்த நோய் கண் வடிவத்திலோ அல்லது வடிவமற்றோ வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேற்பரப்பில் தோன்றும் இந்த நோய் அசுவினிகள், நோய் தாக்கப்பட்ட கிழங்குகள் மூலமும் பரவுகிறது.
தடுக்கும் முறைகள்
நோய் பரப்பும் மாவுப் பூச்சிகள், அசுவினிகளைக் கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சி மருந்து ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் தாக்கிய கிழங்குளை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், நோய் தாக்கப்படாத தோட்டத்திலிருந்து விதைக் கிழங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாழையில் நோயைத் தடுத்து நல்ல மகசூலைப் பெறலாம்.