தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும்.

சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.

முளைப்புத் திறன்

விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன.

முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.

புறத்தூய்மை

பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும்

புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

இனத்தூய்மை

விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள்.

இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம்.

நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.

விதை ஈரப்பதம்

விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது.

உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம்.

விதை நலம்

பயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.