தேனீ வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக்கூடிய ஒரு நல்ல தொழிலாகும்.

மலர்களில் சுரக்கும் இனிப்புச் சாறிலிருந்து தேனீக்களால் உண்டாக்கப்படும் இனிப்பான திரவம்தான் தேன்! உடல்நலத்தைக் காக்கும் சிறந்த உணவு இது.

சிறப்பு பொருந்திய தேனைத்தரும் தேனீக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்குப் பூக்களையே நம்பியுள்ளன. பூக்களில் உள்ள இனிப்புச்சாறு மாவுச்சத்தையும், மகரந்தப்பொடி புரதச்சத்தையும் தருகின்றன.

தேனீ வளர்ப்பு;

செரானா இன்டிகா வகையைச் சார்ந்த தேனீக்களைத் தரமான தேன் பெட்டிகளில் வளர்ப்பதன் மூலம் ஏறத்தாழ 15 கிலோ தேன் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தோட்டங்களில் அதிகமான நிழல் கிடைப்பதால் தேனீ வளர்ப்புக்கு உகந்த சூழல் அமைகிறது.

தேன் பெட்டிகளுக்கு உள்ளே மழைநீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக அவற்றை அமைத்திடுதல் மிக அவசியமாகும். தேனீக்களின் குடியிருப்பு பகுதி வலுவாக இருந்தால், அவற்றின் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

தேனீக்களின் அமைதியான வாழ்க்கைக்கு எப்போதும் நிறைந்த நல்ல தண்ணீர் மிகவும் அவசியமாகும்.

நிழல் தரும் மரங்களையும் செடிகளையும் தேர்வு செய்யும்போது அவை வெவ்வேறு பருவங்களில் பூக்கின்ற இயல்பு உடையதாக இருப்பது நல்லது. இதனால் ஆண்டு முழுவதும் தேனீக்களுக்கு உணவு கிடைக்கும்.

வெற்றிகரமான தேனீ வளர்ப்புக்கு ராணித்தேனீ முக்கியம்…

தோட்டத்துத் தாவரங்கள் பூக்கத் தொடங்கும் முன்பாகவே சிறந்த தேன் பெட்டிகளை வைத்தால், அவை பூக்க ஆரம்பிக்கும்போதே தேனீக்கள் முதலில் தோன்றும் பூக்களினால் கவரப்பட்டு, அவற்றையே தினமும் தேடிச்செல்வது உறுதியாகிறது. அதனால் தேன் உற்பத்தி அதிகரிப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

தேனீ வளர்ப்பவர்கள் தேன் பெட்டி களை அவ்வப்போது மெதுவாகச் சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். ஆரோக்கியமான ராணித்தேனீ சாதக மான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டைகள் வரை இடுமாம்!

ஒரு தேனீப் பெட்டியில் இளம் தேனீக்கள் அதிகளவில் ஆரோக்கியமான சூழ்நிலையில் இருத்தல் அவசியம். தேனீப் பெட்டியில் ராணுவத் தேனீயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தேனீப் பெட்டிகளில் உள்ள எல்லா சட்டங்களிலும் தேனீக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற இயலும்.

தேன்கூட்டில் தேன் உள்ள மேலடையை மெல்ல எடுக்க வேண்டும். இதை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இட்டு, அதன் மேலேயும் கண்ணாடித்தட்டால் ஈயோ, எறும்போ நுழையாதபடி மூடி வெயிலில் வைக்க வேண்டும். தேன் உருகி அடியில் தங்கும். அடை மேலே மிதக்கும்.

அவ்வாறே அதனைக் குளிரச் செய்தால் மேலே மிதக்கும் மெழுகை நீக்கிவிட்டு சுத்தமான தேனைப்பெறலாம். உடலின் நல்ல பலத்திற்கும் இரவில் நலமான உறக்கத்திற்கும் தேன் உதவுவது போன்று வேறெதுவும் உதவுவதில்லை.