நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரத்தை இப்படிதான் இடவேண்டும்...
நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரம் இடுதல்:
சாணம் கரைத்த பின்பு சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும்.
ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் இரசாயன உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில் ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும்.
மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். நிலம் களர் மண்ணாக இருப்பின் யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.
இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில் இரசாயன உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம் பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.
களை மீன்கள் மற்றும் பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு களை மீன்கள் மற்றும் பகை மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
எனவே களை மற்றும் பகை மீன்களை அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவயைற்ற மீன்களைப் பிடித்து அழிக்க வேண்டும். களை அல்லது பகை மீன்களைப் பிடித்து அழிப்பதுசாத்தியமில்லாத சூழ்நிலைகளில் மீன் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.