“தளச்சேரி ஆடு” அல்லது “பரண்மேல் ஆடு வளர்ப்பு” முறையில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கேரள மாநிலத்தில் உள்ள தளச்சேரி பகுதியில் இந்த ஆடு வகை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது பரண்மேல் ஆடு வளர்ப்பு முறையாக பரவலாக அறியப்படுகிறது.

இந்த முறையில் ஒரு விவசாயி குறைந்தபட்சம் 20 ஆடுகள் வளர்ப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

20 பெண் ஆடுகளுக்கு 1 கிடா வீதம் இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 கிடா இருக்கலாம்.

பரண்மேல் வளர்க்கும் இந்த ஆடுகள் 6 மாதத்தில் சுமார் 18 முதல் 20 கிலோ எடை அளவு வளரும் தன்மைக் கொண்டது.

பரண்மேல் ஆடு வளர்ப்பு முறை

இது விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் வகையில் உள்ளது. பால், இறைச்சிக்காக இந்த ஆடுகள் பயன்படுகின்றன. நாட்டுவகை ஆடுகள் ஒரு ஆண்டுக்கு 1 அல்லது 2 குட்டிகள் மட்டுமே ஈனும் இயல்புடையது.

ஆனால் பரண்மேல் வளரும் தளச்சேரி ஆடுகள் முதல்முறையாக குட்டி ஈனும்போது 1 குட்டியும், அடுத்தடுத்து 2 அல்லது அதற்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும் தன்மையையும், 2 ஆண்டு இடைவெளியில் 3 முறை குட்டிகளை பெறும் இயல்புடையதாகும்.

பரண்மேல் ஆடு வளர்ப்பதற்கு அதிக இடம் தேவையில்லை. ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரண் அமைத்தால் போதுமானது. பரண்மேல் ஆடு இருப்பதால் ஆட்டுப் புழுக்கை, சிறுநீர் ஆகியன பரணுக்கு கீழே விழுகிறது. இதனால் வாரத்து ஒரு முறை அல்லது இரண்டுமுறை ஆட்டின் கழிவுகளை அகற்றலாம்.

இவ்வாறு வாரத்துக்கு 1 அல்லது 2 முறை கழிவுகளை அகற்றுவதால் அவற்றை சேகரித்து விளைநிலங்களுக்கு உரமாக பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

இதுபோன்ற முறையில் வளர்க்கப்படுவதால், ஆடுகள் நல்ல சுகாதாரத்துடன் காணப்படுகிறது. மேலும், தற்போது பின்பற்றப்படும் ஆடு வளர்ப்பில் மேய்ச்சலுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால், ஆடுகள் தன் ஆற்றல், சக்தியை இழக்கும் நிலையுள்ளது. அதிக அளவில் எடை இல்லாமல் இருக்கும்.

ஆனால் பரண்மேல் வளர்த்தலில் ஆடுகள் ஒரே இடத்தில் இருப்பதால், ஆட்டின் ஆற்றல் வீணாகாமல் எடை அதிக அளவில் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த வகை ஆடுகளுக்கு நாட்டு ஆடுகள் உண்ணும் புல் வகையே போதுமானது. மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த ஆடுகளை எளிமையாக வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.