கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்புக்கான சில ஆலோசனைகள்..
கொட்டில் முறையில், ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம், அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் போன்றவை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமலோ அல்லது முழுமையாகக் கிடைக்காமலோ இருந்தால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
உதாரணமாக, உலர் தீவனங்கள் கிடைக்கவில்லை என்றால், இனப்பெருக்கத் தன்மையில் குறைபாடு ஏற்படும்.
கொட்டகை அமைத்தல்:
ஆடுகளுக்குக் கொட்டகை அமைக்கும்போது, குளிர், வெயில் பாதிப்பு இல்லாதவாறு, ஒவ்வோர் ஆட்டுக்கும் தேவையான இடவசதியோடு அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீர்நிலைகளுக்கு மிக அருகில் கொட்டகை இருக்கக் கூடாது. நீர்நிலைகளால் ஆடுகள் சுவாச நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம். கொட்டகையின் நீள வாக்கு அமைப்பானது கிழக்கு-மேற்கில் இருக்க வேண்டும்.
கொட்டில் முறை:
தரையிலிருந்து 3-4 அடி உயரத்துக்கு மரப்பலகையால் பரண் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மரப்பலகைக்கும் அரை அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் சாணம் மற்றும் சிறுநீர் கொட்டகையில் தங்காமல் கீழே விழுந்துவிடும்.
பரண் அமைக்கும் மரப்பலகை உறுதியாகவும், ஆடுகளின் மொத்த எடையை தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மரப்பலகையின் அகலம் சுமார் இரண்டரை அங்குலம் இருக்க வேண்டும்.
மரப்பலகை மட்டத்திலிருந்து கொட்டகையின் அதிகபட்ச உயரம் 10 அடியாகவும், குறைந்தபட்சம் 7 அடியாகவும் இருக்க வேண்டும். கொட்டகையின் வெளிப்புறப் பகுதி உட்பகுதியைப் போன்று இரு மடங்கு இருக்க வேண்டும்.
கொட்டகையைச் சுற்றி நான்கு அடி உயரத்துக்குக் கம்பிவேலி அமைக்க வேண்டும். ஆட்டுக் கொட்டகை என்பது உட்பகுதி மற்றும்வெளிப்பகுதியாக இரண்டு அமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் வணிக ரீதியில் அமைக்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளில் வெளிப்பகுதி அமைக்கப்படுவதே இல்லை.
ஆடுகள் கொட்டகையின் வெளிப்புறப் பகுதியில் சுதந்திரமாக நடமாடுவதன் மூலம் தேவையான உடற்பயிற்சி கிடைப்பதோடு, பசியையும் தூண்டி விடுவதால் தீவனங்களை அதிகமாக உட்கொள்ளும்.
மேலும் தேவையான அளவு காற்றோட்டம் கிடைப்பதால், சுவாச நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும். கொட்டகையின் அகலம் 16 முதல் 20 அடியும், நீளம் வேண்டுமளவுக்கும் அமைக்கலாம்.
மேலும் கொட்டகையைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஆடுகளை அதன் வயது, உடல் எடை, சினை பருவம், பால் கொடுக்கும் ஆடுகள், குட்டிகள் எனத் தனித் தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிக் கதவுகள் அமைக்க வேண்டும். கதவின் அகலம் 3 அடி அளவில் இருக்க வேண்டும்.
குட்டிகளைக் குளிரிலிருந்து காப்பாற்ற இரவு நேரங்களில், குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து மின் விளக்குகள் பொருத்த வேண்டும். மின்விளக்குகள் பொருத்துவதன் மூலம் அவற்றிலிருந்து வரும் வெப்பமே கொட்டகையின் சூழ்நிலை வெப்பத்தை அதிகரிக்கும். இதன் மூலம் ஆட்டுக்குட்டிகள் குளிரினால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகின்றது.
தரைகளில் வளர்க்கப்படும் ஆடுகளில் கழிச்சல் , நிமோனியா போன்ற நோய்கள் ஏற்பட்டு, அவற்றினால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், கொட்டில் முறை ஆடு வளர்ப்பில் மேற்கூரிய பிரச்சனைகள் வருவதில்லை. மேலும் ஆடுகளின் உடல் வளர்ச்சித் திறன் மேம்படுகிறது.
வெள்ளாடு வளர்ப்புக் கொட்டில்:
கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள், கொட்டில் அமைக்கத் தேவையான பொருட்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் கிடைக்கிறது.
பலகை ஒரு சதுரடிக்கு 300 ரூபாய். பாலியுரேத்தீன் ஒரு சதுரடிக்கு 900 ரூபாய் விலையில் கிடைக்கிறது.