மாவுப்பூச்சி

இவை மிருதுவான இளஞ்சிவப்பு மஞ்சள் நிற பூச்சிகள். இப்பூச்சிகள் இலை, தண்டு மற்றும் நுனிப்பகுதியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி பாதிக்கும், மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் கரும்பூசன நோய் காணப்படும்.

சாம்பல் கூன் வண்டு

இவை துவரையின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் தாக்குகின்றது. கரும் புள்ளிகளுடைய சாம்பல் நிற கூன் வண்டுகள் இலைகளின் ஒரத்தை உண்டிருக்கும். இதனால் இலைகளின் ஒரம் கிழிந்து காணப்படும். மேலும், சாம்பல் கூன் வண்டு புழுக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு வேரை சாப்பிடும். இவற்றை கட்டுப்படுத்த சேதம் அதிகமாக காணப்படும்போது மட்டும் ஏக்கருக்கு 500 மி.லி. மானோகுரோட்டோபாஸ் (36 WSC ) மருந்தை தெளிக்கலாம்.

காய் துளைப்பான்கள்

இவை துவரை, மொச்சை, கொண்டைக் கடலையை அதிகம் தாக்குகின்றன. புழுக்கள் காய்களைத் துளைத்து (முழுவதுமாய் உட்செல்லாமல் உடலின் பாதி பின் பகுதியை வெளியிலேயே வைத்துக் கொண்டு) உட்பகுதியை குடைந்து தின்று அதிக சேதம் உண்டாக்கும். முட்டைகளை மொட்டுக்களிலோ அல்லது இளம் காய்களிலோ தனித் தனியே இடும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்களின் தாய்ப்பூச்சிகள் மிகவும் சிறியவை. இவைகள் முதிர்ச்சியடையக்கூடிய விதைகளை தாக்குகின்றன. காய்களின் ஓரங்களில் முட்டைகளும், வட்ட வடிவ துளைகளும் காணப்படும்.

தண்டு 'ஈ'

தண்டு ஈ, சாம்பல் கலந்த கருமை நிறமுடையது. பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்தவற்கு கத்தரி, வெண்டை, சோயா மொச்சை போன்ற செடிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. இப்பூச்சிகள் மஞ்சள் தேமல் வைரஸ் நோயை பரப்புகின்றன.

செடிகளின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் வைரஸ் நுண் கிருமிகளை செலுத்திவிடுவதால் நோயின் அறிகுறி வெளிப்படுவதற்கு 15 முதல் 20 நாட்கள் வரை தேவைப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறி வெளிப்பாடு இரகம், மண்ணில் இருக்கும் நுண்ணுட்டச்சத்துகள், அங்ககப் பொருள்கள், சீதோஷ்ண நிலை மற்றும் இவைகளின் கூட்டுச் செயலாக்கத்தை பொருத்து மாறுபடுகின்றது.

அந்திப்பூச்சி

இளம்பழுப்பு நிறத்தில், முன் இறக்கை இரண்டு பகுதியாகவும், பின்னிறக்கை மூன்று பகுதியாகவும் பிளவுபட்டிருக்கும். புழுக்கள், மொக்குகளையும் விதைகளையும் வெளியிலிருந்து கொண்டே சாப்பிட்டு அழிக்கும். தாக்கப்பட்ட மொக்கு மற்றும் காய்களில் சிறிய துவாரம் காணப்படும்.

இலைப்பேன்

இவை இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இளம் தளிர்கள் மற்றும் இலை மொக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி தடைபடுகின்றது. இதனால் விளைச்சல் கணிசமான அளவில் பாதிப்படைகின்றது.

அசு உனி

இவை அனைத்து பயறு வகைப் பயிர்களையும் தாக்குகின்றன. கருமை நிறமுடைய அசுவினிகள் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகளில் கரும்பூசண எறும்புகளின் வளர்ச்சி, தேன் போன்ற திரவம் படிந்திருத்தல் போன்றவை தாக்குதலின் அறிகுறிகளாகும்.

தத்துப்பூச்சி

தத்துப்பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சுகின்றன. செடிகள் வளர்ச்சிகுன்றி, சுருங்கி மஞ்சள் நிறமாக மாறும்.

ஈரியேபைட் சிலந்தி

இவ்வகை சிலந்திகள் காற்றின் மூலம் பரவுகின்றது. இவை நேரடியாக உண்டாக்கும் சேதம் குறைவு. ஆனால், மறைமுகமாக மலட்டுத் தன்மையை பரப்பவல்லது.