பருத்தி  சாகுபடி

தமிழக விவசாயத்தில் பருத்தி ஒரு மிக முக்கிய பணப் பயிராகும். இறவை பயிராகவும் மானாவாரிப் பயிராகவும் பயிரிடப்படுகிறது. 

நம் நாட்டில் வேளாண்மை செய்யப்படுகின்ற மொத்த பரப்பளவில் சுமார் ஐந்து விழுக்காடு பரப்பில் மட்டுமே பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் உபயோகிக்கப்படுகின்ற பூச்சி கொல்லிகளில் சுமார் 55 விழுக்காடு, பருத்தியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பருத்தியை பல வகையான பூச்சிகள் பயிர் வளர்ச்சியின் பல நிலைகளில் தாக்கி அழிக்கின்றன. அவைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி பராமரிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. 

இயன்ற அளவிற்கு ஒரு கிராமம், வட்டாரத்தில் ஒரே பருத்தி இரகத்தை தேர்ந்தெடுத்து, அனைவரும் குறுகிய கால இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும்.

அமிலம் கொண்டு பஞ்சு நீக்கிய பொறுக்கு விதைகளை நடுவது நல்லது.

விதை நேர்த்தி

சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட விதை நேர்த்தி (அ) புதியதாய் வடிவமைக்கப்பட்ட விதை நேர்த்தி முறையை (பஞ்சு நீக்கப்பட்ட விதை + பாலிகோட் 3 கி /கிலோ + கார்பன்டாசிம் 2 கி / கிலோ + இமிடாகுளோபிரிட் 7 கி / கிலோ + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி / கிலோ + அசோபாஸ் 40 கி / கிலோ) கடைபிடித்து விதைக்கவும். 

இந்த விதை நேர்த்தி முறையைக் கடைபிடித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் 45 நாட்கள் வரை கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், பயிர் ஆரம்ப நிலையிலேயே ஊக்கத்துடன் வளரும்.

களை மேலாண்மை

பருத்தி இனத்தைச் சார்ந்த வெண்டை, புளிச்சை போன்ற பயிர்களும், துத்தி, கண்டங்கத்தரி போன்ற களை செடிகளும் பருத்திக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல களை செடிகள் பருத்தியைத் தாக்கும் பூச்சிகளுக்கு மாற்று உணவு செடிகளாக இருப்பதால் காலத்தே களையெடுத்து, பருத்தி தோட்டம் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதால் பின் விளைவுகளை சுலபமாக சமாளிக்கலாம்.

தக்க தருணத்தில் களை எடுத்து செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதனால் தண்டுக்கூன் வண்டின் சேதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.

உரம் மற்றும் நீர் நிர்வாகம்

உரம் மற்றும் நீர் பராமரிப்பு மிகவும் அவசியம் ஆகும். பரிந்துரை செய்யப்படுகின்ற உர அளவிற்கு மேல் உரமிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ப நீர் பாய்ச்சினால் போதுமானது. 

இவை இரண்டும் செடிகள் அதிக இலைகளுடன் வளர்ந்து பூச்சி பெருக்கத்தை ஓரளவு தடுக்க ஏதுவாகிறது. தொழு உரம் அதிகமாக உபயோகித்தால் நூற்புழு தாக்குதலைத் தவிர்க்கலாம். அதிக தழைச்சத்து, வெள்ளை ஈ, பச்சைப்புழு ஆகியவற்றின் பெருக்கத்திற்கு உகந்தது.