Asianet News TamilAsianet News Tamil

சம்பா பருவத்தில் நீர் கிடைக்காத சூழ்நிலையில் கைகொடுக்கும் நேரடி புழுதி விதைப்பு முறை…

Samba season water is not available the situation will cover the direct seeding method fluff
samba season-water-is-not-available-the-situation-will
Author
First Published Apr 17, 2017, 10:54 AM IST


சம்பா பருவத்துக்கு நாற்று விடும் பருவமான ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாசனத்துக்கு மேட்டூர் நீர் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் புழுதி நேரடி விதைப்பு முறை ஒரு சிறந்த தீர்வாகும்.

கடந்த 2004-ல் இதேபோன்ற நிச்சயமற்ற காலநிலையில் வேளாண் துறையால் இம்முறை பரிந்துரைக்கப்பட்டு விவசாயிகளால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஒன்றாகும்.

புழுதி விதைப்பு செய்வது எப்படி?

அவ்வப்போது கிடைக்கும் மழைக்கேற்ப நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை புழுதி உழவு செய்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 5 லிருந்து 15 தேதிக்குள் விதைப்பு செய்து படல் இழுத்து விதைகளை மூட வேண்டும்.

இதை டிராக்டரைக் கொண்டு செய்ய முடியும். இவ்வாறு புழுதி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் மழை மூலமோ, பாசனம் செய்தோ போதுமான ஈரப்பதம் கிடைக்கும்போதோ முளைத்து வரும்.

வாரக்கடைசியில் மழை இல்லாவிட்டாலும் விதைகள் பாதிக்கப்படுவதில்லை. சில சமயம் மழை போதுமானதாக அமையாவிடில் வயலில் மேலாக உள்ள விதைகள் மட்டும் முளைத்துவரும்.

அடுத்து வரும் மழைக் காலங்களில் மீத விதைகள் முளைக்கும். இதனால் ஏற்படும் நாற்றின் வயது வேறுபாட்டை உர மேலாண்மை மூலம் சரிபடுத்திக் கொள்ள முடியும்.

விதை அளவு:

சம்பா பருவத்துக்கு நாற்றங்காலுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான ஏக்கருக்கு 16 கிலோவை போல இருமடங்கு அளவு விதையளவு நேரடி புழுதி விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 30 லிருந்து 35 கிலோ வரை விதைகளை, விதைப்பு செய்யலாம்.

நேரடி புழுதி விதைப்புக்கு விதை டிரம் அல்லது விதைக் கருவி (நங்ங்க் ஈழ்ண்ப்ப்) கொண்டு விதைப்பு மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 12 அல்லது 15 கிலோ விதையே போதுமானதாக இருக்கும்.

இம்முறையை கடைபிடித்தால் வேளாண்மைத்துறை வழங்கிவரும் திருத்திய நெல் சாகுபடிக்கான மானிய உதவிகளை பெற முடியும்.

களை நிர்வாகம்:

 

நேரடி புழுதி விதைப்பின் பிரச்னையாக கருதுவது களை எடுக்கும் பணி. இதற்கு விவசாயிகள் ரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். பயிர் முளைத்து 15 நாட்களிலிருந்து 25 நாட்களுக்குள் வயலில் எம்மாதிரியான களைகள் முளைத்துள்ளன என்பதற்கேற்ப களைக் கொல்லிகளை தேர்வு செய்து களைகளை கட்டுப்படுத்தலாம்.

வயலில் கோரைகள் மட்டும் இருப்பின் 2, 4 கலைக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். வயலில் புல் வகை களைகள் மட்டும் இருப்பின் ஃபெளோக்சா புரோப்பாரிதல் 9.3 சதவீத நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வயலில் கோரைகள், புற்கள் என இரண்டு விதமான களைகளும் இருப்பின் பிஸ்பைரிபேக் சோடியம் 10 சதவீதம் களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி என்ற அளவில் சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்துகையில் வயலில் நீர் தேங்கி நிற்கக்கூடாது.

உர நிர்வாகம்:

பயிர் முளைத்தலிலிருந்து 30-ம் நாள் வயலில் நீர் நிறுத்தி அடியுரம் இட வேண்டும். அடியுரம் இட்டதிலிருந்து 20 நாட்கள் இடைவெளியில் மேலுரம் இட வேண்டும்.

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:

நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்க முடியும். நடவு செய்யும்போது ஆட்கள் பற்றாக்குறையால் பயிர் எண்ணிக்கை சரியாக பராமரிக்க முடிவதில்லை. நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை ஒரு சதுரமீட்டருக்கு 60-ஐ விட அதிகமாக இருப்பின் களைத்து விட வேண்டும்.

பயிர் எண்ணிக்கை மிக குறைந்துவிட்டால் திருத்திய நெல் சாகுபடி செய்வது போன்று மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் விட்டு 12 முதல் 16 நாள் வயதுடைய நாற்றுகளை விட்டு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.

நேரடி புழுதி விதைப்பின் நன்மைகள்: இதன் மூலம் சாகுபடி செலவு குறைவு. நாற்றங்கால் தயாரித்தல், நாற்று பறித்தல், நடவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாமையால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை சாகுபடி செலவு மிச்சமாகிறது.

நெற்பயிரின் வயது 10 நாட்கள் வரை குறைகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் நீர் நிச்சயமற்ற காலநிலையில் நம்பிக்கை இழக்காமல் வரும் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பின் மூலம் சாதனை படைக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios